வெள்ளி, 5 அக்டோபர், 2012

'காந்தி கண்ட பாராளுமன்ற ஜனநாயக முறை வரவில்லை'

பேராசிரியர் ஆர்.ஸ்ரீநிவாசன் பேச்சு


 திருப்பூர், அக். 2:  காந்தி கண்ட பாராளுமன்ற ஜனநாயக முறை பின்பற்றப்படுவதில்லை என, காந்திய சிந்தனையாளரும், சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியருமான ஆர்.ஸ்ரீநிவாசன் கூறினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை, ஏ.குழந்தைவேலு முதலியார்- நாச்சம்மாள் அறக்கட்டளை, சர்வோதய கதர்  ஊழியர் சங்கம் ஆகியவை இணைந்து காந்தி ஜயந்தி விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடின. இதற்கு, சென்னை சில்க்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் கே.பரஞ்சோதி தலைமை வகித்தார்.

இதில், பேராசிரியர் ஆர்.ஸ்ரீநிவாசன் பேசியது:

இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறை என்பது பிரிட்டிஷ் பாராளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது காந்தி விரும்பிய முறை அல்ல. கிராம குடியரசு முறையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

கிராமங்களை மதித்து நடக்கும் நடைமுறை மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தது. இந்தியாவில் உள்ள கிராமங்களில் உயிர் இருக்கிறது. தாய்மொழிதான் சுதேசி மொழி என்று கூறிய காந்தி, தனது அனைத்து நூல்களையும் குஜராத்தி மொழியில்தான் எழுதினார். தமிழர்களுக்கு சுதேசி மொழி உணர்வு இருக்கிறதா என்பதை ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 6 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில், குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கிறோம். தமிழ் மொழிக்கு செய்யும் இக் கொடுமைக்கு, என்ன விலை கொடுக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை.

'அவரவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களோ, அவர்கள் அந்த மதத்திலேயே இருக்க வேண்டும். பிற மதத்தினர் இந்து மதத்தில் சேர வேண்டும் என்று ரகசியமாகக் கூட பிரார்த்தனை செய்து கிடையாது' என்று காந்தி கூறியுள்ளார். காந்தி கூறியதை உணர்ந்து செயல்பட்டால், மதமாற்றங்கள் நிகழாது.

பக்கத்தில் இருக்கும் உற்பத்திப் பொருள்களை நுகர வேண்டும் என்பதுதான் சுதேசிப் பொருளாதாரம். கிராமம், நகரம், நாட்டிற்குள் உற்பத்தியாகும் பொருள்களை நுகர வேண்டும்.  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது.  இதனால் உள்ளூர் தொழில் வளராது. 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்றார்.

நேஷனல் சில்க்ஸ் என்.அருணாசலம், கீதா மெடிக்கல்ஸ் வி.தெய்வசிகாமணி, திருமலை டையிங் ஏ.பழனிசாமி, அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூடம் தலைவர் எம்.ரத்தினம் செட்டியார், சர்வோதய சங்க முன்னாள் தலைவர் ஜி.வீரப்பிரகாசம், கலை இலக்கியப் பேரவைத் தலைவர் வி.டி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற மு.ராமசாமி, ஆர்.ஸ்ரீதரன், மாரிமுத்து, ருக்மணி, தனலட்சுமி, பிரேமாபாய், குழந்தைவேலு, பழனிசாமி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டுப் பிரார்த்தனை: அறம் அறக்கட்டளை சார்பில் காந்தி நகர் சர்வோதய சங்க வளாக மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதற்கு, அலகுமலை ஸ்ரீ தபோவனம் ஆசிரம நிறுவனர் சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி தலைமை வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுகள் சமிதி மாநில பொதுச்செயாலளர் பி.ஆர்.நடராஜன், குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம்.அகமது பைசல், அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத் தலைவர் கே.கிங் நார்சியஸ், தேவலோக அன்பு நிலைய அறக்கட்டளை செயலாளர் டி.ஆர்.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- தினமணி (03.10.2012)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக