திங்கள், 28 ஜூலை, 2014

கலாசாரமே இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரம்

- பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

தினமணி செய்தி- 21.07.2014


பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்
நமது நாட்டின் கலாசாரமே பொருளாதாரத்தின் ஆதாரமாக உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் சீர்குலைந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரம் நிலைத்து நிற்க இதுவே காரணம் என்றார் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்.

திருப்பூரில் அறம் சிந்தனை வட்டம் நடத்திய மாதாந்திரச் சொற்பொழிவு நிகழ்ச்சி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில், தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு, ‘பொருளாதாரத்தின் ஆதாரம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

பொதுவாக பாரதம் ஏழமையான நாடு என்றே நாம் கருதி வருகிறோம். நமது கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரம் பற்றிப் படிக்கும்போது நம்மை வளரும் நாடு என்றே படிக்கிறோம். நமது முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூட இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று வெளிநாடு சென்றபோது குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் பொருளாதாரத்தை விளக்க வைத்திருக்கும் அளவுகோல்கள் தவறானவை என்பதை இப்போது உலகம் புரிந்துகொண்டு வருகிறது.

பால் பைரோப் என்ற உலகப் பொருளாதார மேதை அண்மையில் எழுதிய உலகப் பொருளாதாரம் பற்றிய நூல் ‘ஒரு பேரரசு மீண்டும் எழுகிறது’ என்ற தலைப்பிலானது. அதில், வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்துவதாக இந்தியா விளங்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏங்கர் மேடிசன் என்ற பொருளாதார அறிஞர் எழுதிய ஆய்வு நூலான ‘இரண்டாயிரம் ஆண்டுகால உலகப் பொருளாதாரத்தின் போக்கு’ என்ற நூலில், “கி.பி. 1750 வரை இந்தியாவே உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை வகித்தது; உலக உற்பத்தியில் (ஜி.டி.பி.) 33 சதவீதம் பங்களித்துவந்தது. அதையடுத்து சீனா 28 சதவீத பங்களித்தது. அதன்பிறகு காலனி ஆதிக்கத்தால் உலக நாடுகளை அடிமைப்படுத்திய ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுரண்டிக் கொழுத்தன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா செல்வச் செழிப்பான தேசமாக இருந்ததால் தான் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு கடல்வழி கண்டறிய முயன்றன. பிரிட்டிஷ் கல்வி நிபுணரான மெக்காலே, “இந்தியாவில் திருடப்பட்ட செல்வம் இல்லாவிட்டால் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி சாத்தியமாகி இருக்காது”  என்று தனது நூலில் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக வல்லரசான அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது சீனா உள்பட பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவும் அப்போது சற்றே பாதிக்கப்பட்டபோதும், உடனடியாக சுதாரித்துக் கொண்டது. அப்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் வித்யாசமானது என்பதை உலகம் உணர்ந்தது.

பங்குச்சந்தை அடிப்படையிலானதாகவும், யூக வர்த்தகம் சார்ந்ததாகவும், நுகர்வியத்தை நம்பி இருப்பதாகவும் அமெரிக்காவின் மேற்கத்திய பொருளாதாரம் உள்ளது. இது கடன்களின் மீது கட்டப்பட்ட மாயமாளிகை. எனவே தான் நீடித்த நிலையான வளர்ச்சியாக அது இல்லை. தற்போதைய நிலை நீடித்தால் அமெரிக்கப் பொருளாதாரம் சீட்டுக்கட்டு மாளிகை போல மிக விரைவில் கவிழ்ந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மாறாக, இந்தியப் பொருளாதாரமோ, சேமிப்பின் அடிப்படையிலானதாகவும், சிக்கனத்தின் மீதும் அமைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இருப்பது இந்திய குடும்ப அமைப்பு முறையாகும். மேற்கத்திய சமுதாயம் ஒப்பந்த அடிப்படையில் அனைத்தையும் அணுகும்போது, இந்திய சமுதாயம் உறவின்முறையில் அனைத்தையும் அணுகுவதால் சிறப்பானதாக இருக்கிறது.

மேற்கத்திய நாகரிகத்தில் திருமணம் கூட ஓர் ஒப்பந்தமே. இந்தியாவிலோ வர்த்தகம் கூட உறவுமுறை சார்ந்துள்ளது. இந்த உறவுக்கு உள்ள பொருளாதார மதிப்பு கண்களுக்குப் புலப்படாது. உறவுமுறை சமுதாயத்தில் தனிநபருக்கும் அரசுக்கும் இடையே குடும்பம், பங்காளிகள் போன்ற நெருங்கிய ரத்தபந்தம், குலம், ஜாதி, கிராம சமுதாயம் போன்றவை உள்ளன. இதனால் தனிநபரும் கூட அரசின் உதவி இல்லாமலே பாதுகாப்பாக வாழவும், வாழ்வில் உயரவும் முடிகிறது.

அமெரிக்காவில் முதியோர், உடல் ஊனமுற்றோர், வேலையில்லா இளைஞர்கள் ஆகியோரைக் கவனிப்பது அரசின் பணி. மாறாக, இந்தியாவில் நிலவும் சிறப்பான குடும்ப அமைப்பு, ஆதரவற்ற தனிநபர்களை அரசு உதவியின்றியே பாசத்துடன் பராமரிக்கிறது. இது நமது பலவீனமல்ல, பலம் என்பதை உலகம் இப்போது தெரிந்துகொண்டுவிட்டது; நாம் தான் உணர மறுக்கிறோம்.

மூன்று வகையான சமுதாய அமைப்புகள் உலகில் உள்ளன. அரசே சந்தையையும் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான, சோஷலிஸம் சார்ந்த அரசுக்கு சீனாவை உதாரணமாகச் சொல்லலாம். அங்கு தனிநபர் சுதந்திரம் இருக்காது. சந்தையே அரசையும் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தும், முதலாளித்துவ அடிப்படையிலான அரசுக்கு அமெரிக்கா உதாரணம். இங்கு அரசே சந்தைக்கு சேவகம் செய்வதாக மாறிவிடும். இவ்விரண்டிலுமே சமுதாயம் இரண்டாம் பட்சமானது.

இவை இரண்டுக்கும் மாற்றாக சந்தையையும் அரசையும் கட்டுப்படுத்துவதாக சமுதாயம் அமைந்திருப்பது மூன்றாவது சமுதாய அமைப்பாகும். இதற்கு குடும்ப அலகுகளின் மீது கட்டியமைக்கப்பட்ட இந்திய சமுதாயமே உதாரணம். நம் நாட்டில் அரசு எந்த உதவியும் செய்யாதபோதும், வங்கிகள் கடன் கொடுக்க மறுத்த காலகட்டத்திலும்,  திருப்பூர், சிவகாசி, லூதியானா, நாமக்கல், சூரத் போன்ற 2,000-க்கு மேற்பட்ட தொழில் நகரங்கள் நாட்டில் உருவாகி வளர்ந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையானது நமது குடும்ப அமைப்பே. இதையே நவீனப் பொருளாதாரம்  ‘சகோதரத்துவ மூலதனம்’ என்று குறிப்பிடுகிறது.

இங்கு சந்தை நுகர்வியம் கட்டுக்குள் இருப்பதால், குடும்பப் பெண்களின் சிக்கனத்தால் உறுதியான குடும்பப் பொருளாதாரம் உருவாகிறது. அனைத்து குடும்ப அலகுகளும் சேர்ந்து நாடாகின்றன. ஓர் அரசால் குடும்பத்தை உருவாக்க முடியாது; குலைக்கவே முடியும்.

இங்கு தான் பாவம்- புண்ணியம் போன்ற தத்துவங்களால் நேர்மையான வர்த்தகமும் போட்டியற்ற வர்த்தகமும் சாத்தியமாகி இருக்கின்றன. நமது அதீத மக்கள் தொகையையும், சட்ட அமைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் ஒப்பிடுகையில் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கும் நமது பண்பாடே காரணம். அதேபோல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள இனக்குழு அடிப்படையிலான ஜாதி முறையும் அரசு உதவியின்றி தனிநபர் உயர வழிவகுக்கின்றன. இதற்கு நாடார் உறவின் முறை சமுதாயத்தைக் கூறலாம்.

உலகிலேயே அதிகமான இளைஞர் சக்தியுள்ள நாடு இந்தியா. உலகிலேயே அரசு உதவின்றி தனித்து நிற்கும் குடும்ப அமைப்பு கொண்டதாகவும் இந்தியா மட்டுமே உள்ளது. நமது குடும்பங்களின் சேமிப்பே நாட்டை நெருக்கடிக் காலத்தில் காத்தும் வந்துள்ளது. எனவே தான், கோல்டுமேன் சாக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு, 2030-இல் இந்தியா உலகப் பொருளாதாரத்தின் தலைமையை வகிக்கும் என்று கூறியிருக்கிறது.

ஆகவே, நமது நாட்டின் பொருளாதாரம் அறத்தின் அடிப்படையிலும் குடும்பங்களின் மீதும் கட்டமைக்கப்பட்டதாக உள்ளது. கலாசாரமே நமது பொருளாதாரத்தை வழிநடத்துகிறது. நமது வாழ்க்கை முறையும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை இப்போது உலகம் கண்டுகொண்டுவிட்டது. இதனை நாமும் உணரும் போதுதான் நமது பொருளாதார வளர்ச்சியில் பெருமிதம் கொள்ள முடியும்.

இவ்வாறு பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். செயலாளர் சிவகுமார் அமைப்பின் நோக்கங்களை எடுத்துரைத்தார். முடிவில் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.